Thursday, August 12, 2010

நாங்க அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸூ....

கருத்துக்குரல் வாசகர்களுக்கு வணக்கம்...

கடந்த பதிவில் வெளியிடப்பட்ட கருத்துரிமைக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கம் குறித்த செய்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அரசு எதேர்ச்சிதிகாரங்களுக்கு எதிராக புரட்சி சிந்தனையாளர்கள் கிளர்ந்தெழும் போது அவர்களை உளவியல் ரீதியாக முடக்க முயற்சிகள் நடக்கும். இதற்கு நம் கருத்துரிமை கூட்டமைப்பும் விதிவிலக்கல்ல. கருத்துரிமை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்ய தொடங்கியதிலிருந்தே அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும். வதந்திகளும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை சுற்றி வலம் வரத் தொடங்கின. ஆனால் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையான கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் பறிபோவதை ஒரு போதும் அனுமதியோம் என்று எழுந்த இளைஞர் கூட்டத்தின் முன் சில வஞ்சக நரிகளின் வேலை செல்லுபடியாகவில்லை.


பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரம் பறிபோகிறது, அவரது அலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்பதை கண்டித்தும் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில நல்ல பத்திரிக்கையாளர்கள் தான் இந்த கூட்டம் குறித்த ஒவ்வொரு தகவலையும் நொடிக்கு ஒரு முறை உளவுத் துறைக்கு சொல்லியுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆயத்தமான மற்ற பத்திரிக்கையாளர் நண்பர்களையும் ஏது ஏதோ வதந்திகளை சொல்லி அவர்களை தடுக்கவும் முனைந்துள்ளனர்.




ஐயா, குள்ள நரி வேலை செய்யும் சானக்கியர்களே...நாளை உங்களை யாராவது தூக்கி போட்டு மிதித்தாலும் நாங்கள் போராடுவோம்...

கேரள சமாஜத்தில் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்த போதே அந்த மண்டபத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு புத்திசாலித்தனமான தகவலை மிரட்டலாக சொன்னது நம்ம உன்னத உளவுத் துறை...மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இந்த கூட்டம் நடக்குது அதை உடனே நிறுத்தங்க ! என்று மண்டப நிர்வாகிகளை போலீசார் மிரட்டினர். ஆனால் உண்மையை நேரில் அறிந்திருந்த கேரள சமாஜ நிர்வாகிகள் சற்று பதற்றத்துடன் இருந்தாலும், கடைசி வரை கருத்தரங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்

சேட்டன் மார்களே நிங்களுக்கு எங்களண்ட நமஸ்காரங்கள் !

ஒருவழியாக அத்தனை எதிர்ப்புகளையும் மீறி 200க்கும் மேற்பட்டோரின் ஆதரவுடன் வெற்றிகரமாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அரசும், அரசுக்கு அடிவருடி வேலை செய்யும் எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்கும், ஆபத்து என்று ஒன்று வந்தால் எங்களால் மட்டுமே காக்கப்பட கூடியவர்களான பத்திரிக்கை நண்பர்களும், தங்களது அடுத்த கட்ட குள்ள நரி வேளைகளில் இறங்கியுள்ளனர். 


கருத்தரங்கத்தை முன் நின்று ஏற்பாடு செய்தவர்கள், கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் என அனைவரையும் கண்கானிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறதாம் உளவுத் துறை. நம் பத்திரிக்கை நண்பர்களோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் மீது பல கட்டுக்கதைகளை ஊடக வட்டாரங்களுக்குள் உலாவர விட்டிருக்கின்றனர். கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும், அவரவர் பணிபுரியும் இடங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட இருப்பதாகவும்,  உளவுத்துறையின் தீவிர கண்கானிப்பில் இருப்பதால அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் ரீல் விட்டு வருகின்றனர்.

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ்...





நீங்கள் கேட்டால் விழுந்து விழுந்து சிரிக்க கூடிய அம்சம் என்னவென்றால், கருத்துரிமைக் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், கனடாவிலிருந்து அவர்களுக்கு நிதி உதவி வருவதாகவும் ஒரு புது புருடாவை ஏவி விட்டிருக்கிறது மாநில உளவுத் துறை.கனடாவிலிருந்து நிதி வந்தால் எதற்கு கருத்தரங்கு...பெசன்ட் நகரில் பிளாட் அல்லவா வாங்கியிருப்போம்

ஐயா ! நாங்க அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையா ! we are just dummy pieces .

ஆக மொத்தம் உருட்டியோ மிரட்டியோ கருத்துரிமைக் கூட்டமைப்பை முடக்கலாம் என்பது உளவுத் துறையின் எண்ணம். அது ஒருபோதும் நடக்காது. ஆட்சிகள் மாறலாம் கட்சிகள் மாறலாம்...கருத்துரிமைக்கு எங்கு எப்போது பங்கம் ஏற்பட்டாலும் நாங்கள் வெகுண்டெழுவோம்.. என்றைக்கு ஆட்சியிலிருப்போர் எம்மை போன்ற சிறிதாய் இருந்தாலும் மன பலத்தில் பெரிதாய் இருக்கும் அமைப்புகளை கண்டு அஞ்சி நடுங்குகிறதோ அன்றே நாங்கள் ஜெயித்துவிட்டோம்....


உம் மிரட்டல்களே !
எம் தோளில்
வெற்றி மாலைகள் ஆயின....

எம்மை வீழ்த்த நினைப்போருக்கு ஒரே பதில்


                                     வீழ்வேன் என்று நினைத்தாயோ !

- கருத்துரிமை கூட்டமைப்பு

Wednesday, August 11, 2010

சிறு பொறி...காட்டுத் தீயானதோ ?

கருத்துரிமை...
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால் இது தற்கால தமிழக அரசியல் சூழலில் கேள்விக்குறிக்கெல்லாம் கேள்விக்குறியாகி மாறி வருகிறது. இப்படி இருக்க எங்கும் எதிலும் கருத்து சுதந்திரம், பத்திரிக்கைகளில் எழுத்துரிமை, சிந்தனையாளர்களின் சிந்திக்கும் உரிமை என அனைத்தும் அரசு எதேர்ச்சிதகிராத்தால் முடக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தொடர்ந்து கருத்து சுதந்திரமும், பத்திரிக்கை ஜனநாயகமும் நசுக்கப்பட்டதால் வெகுண்டெழுந்த சில உரிமை முழக்கங்கள் கருத்துரிமைக்காக போராட ஒரு களத்தினை அமைத்திட துடித்தன. அதன் விளைவே கருத்துரிமைக்கான கூட்டமைப்பும், அதன் தொடர் முயற்சியால் நடத்தப்பட்ட கருத்துரிமைக்கான கருத்தரங்குமும் உருவாகியுள்ளது.

கருத்தரங்கத்தின் ஒரு பகுதி




சென்னை கேரள சமாஜத்தில் 7.8.10 அன்று கருத்துரிமைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. '' ம் '' என்றால் சிறைவாசம் என்று பாவேந்தரின் வாசகங்களை அடிப்படையாக கொண்டு இந்த கருத்தரங்கமானது நடைபெற்றது. இதற்காக வரையப்பட்டிருந்த பேனர்களும் கார்ட்டூனும் சிந்தனையாளர்கள் முதல் சாமானியர்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்த்தன. தற்கால அரசின் பிரதிநிதியை விமர்சிக்கும் வகையில் தான் இந்த கார்ட்டூன்கள் வரையப்பட்டுள்ளதாகவும், எந்த அரசு கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டாலும் நிச்சயம் தங்கள் அமைப்பு போராடும் என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.



பேனர்களில் இருந்த கருத்துப்படம்


 கருத்தரங்கத்தில் தமிழகத்தின் பல முண்ணனி கருத்துரிமை போராளிகள் உரை நிகழ்த்தினர். விழாவில் பேசிய தமிழருவி மணியன், இன்று தங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்போரை நசுக்க துடிக்கும் ஆளும் கட்சி, தாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எப்படியெல்லாம அப்போதைய ஆளுங்கட்சியினரை விமர்சித்தார்கள் என்று சுட்டிக்காட்டினார். காமராசரை, அண்ணா செய்த விமர்சனங்களையும் அவர் மேற்கொள் காட்டினார்.


மேடையில் முழங்கும் தமிழருவி மணியன்


மற்றொரு சிறப்பு பேச்சாளரான பீப்பிள்ஸ் மார்ச் பத்திரிக்கையின் ஆசிரியர் கோவிந்தன் குட்டி, அகில இந்திய அளவில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதற்கான உதாரணங்களை சுட்டிக் காட்டி உரை நிகழ்த்தினார். விழாவில் இறுதியாக பேசிய தோழர். தியாகு பொது இடங்களில் கூட்டம் கூட வழி வகை செய்ய மறுக்கும் அரசு அதிகாரத்தை விமர்சித்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 140ன் படி பொது கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டியிருப்பதாகவும் இச்சட்டமானது வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் ஆனால் அரசு எந்திரம் இச்சட்டத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை புதுபித்து வருவதாகவும், இது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையை நசுக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டினார். மக்கள் சக்தி கட்சியின் விஜய் ஆனந்த், தமுமுக மாநிலச் செயலாளர் போராசிரியர் ஹாசா கனி, நாம் தமிழர் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் அதியமான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் இணை செயலாளர் பாரதி தமிழன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள இக்கூட்டமைப்பு கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் வெகுண்டெழுந்து மக்கள் இயக்கங்கள் நடத்தும் என்று கூட்டமைப்பினர்  தெரிவித்தனர்.


ஆம் அரசு எதேர்ச்சதிராகரித்திற்கு எதிராக எழுந்துள்ள இந்த சிறு பொறி நிச்சயம் காட்டுத் தீயாகும்...ஆக வேண்டும்...